சா்ச்சை எழுந்ததால் முஸ்லிம் கொடி அகற்றம்; மணிக்கூண்டில் மூவர்ணம் தீட்டப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது
கோலார் டவுனில் சர்ச்சை எழுந்ததால் முஸ்லிம் கொடி அகற்றப்பட்டு மணிக்கூண்டில் மூவர்ணம் தீட்டப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதன்மூலம் 2 நாட்களாக நீடித்த பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:
பழமையான மணிக்கூண்டு
கோலார் டவுனில் மணிக்கூண்டு (கிளாக் டவர்) அமைந்துள்ளது. இந்த மணிக்கூண்டு சுமார் 70 ஆண்டுகள் பழமையானது. இந்த மணிக்கூண்டை சுற்றி உள்ள பகுதிகளில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இதன்காரணமாக மணிக்கூண்டில் முஸ்லிம்களின் பச்சை கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மணிக்கூண்டில் உள்ள முஸ்லிம்களின் ெகாடியை அகற்றவிட்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தினர். கடந்த சில தினங்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் 2 நாட்களில் தேசியக்கொடி ஏற்றுவது உறுதி என்று அவர்கள் அறிவித்தனர்.
இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிலை உண்டானது.
பேச்சுவார்த்தை
இதன்காரணமாக மணிக்கூண்டில் பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு ெசய்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா, போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் இருதரப்பினரையும் ழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அவர்கள் நிலைமையை எடுத்து கூறினார்கள். அப்போது மணிக்கூண்டில் உள்ள முஸ்லிம் கொடியை அகற்றிவிட்டு தேசியக்கொடியை ஏற்ற முஸ்லிம் பிரமுகர்கள் ஒப்புக்கொண்டனர்.
தேசியக்கொடி ஏற்றப்பட்டது
இதையடுத்து மாவட்ட நிர்வாகமே மணிக்கூண்டில் முஸ்லிம் கொடியை அகற்றி தேசியக்கொடியை ஏற்ற நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மணிக்கூண்டில் மூவர்ணம் பூசப்பட்டு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மோதல் ஏற்படாமல் தடுக்க பதற்றமான சூழலை மாவட்ட நிர்வாகமே கையாண்டதால், 2 நாட்களாக நீடித்த பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கோலார் தங்கவயல் பா.ஜனதா தலைவர் கமலநாதன் கூறுகையில், இது பா.ஜனதாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மணிக்கூண்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டதற்கு பா.ஜனதா தான் காரணம் என்றார்.
Related Tags :
Next Story