வேளாண் பட்ஜெட் பற்றி குமரி விவசாயிகள் கருத்து
தமிழக வேளாண் பட்ஜெட் பற்றி குமரி விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
தமிழக வேளாண் பட்ஜெட் பற்றி குமரி விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அருமையான திட்டம்
இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள், விவசாய பிரதிநிதிகளின் கருத்துகள் விவரம் வருமாறு:-
குமரி மாவட்ட பாசன சபைகள் கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா:-
வேளாண் மை பட்ஜெட்டில் நீர் நிலைகள் மற்றும் தடுப்பு அணைகள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்க தக்கது. இத்தகைய நிதி குமரி மாவட்டத்தில் அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1 லட்சம் வரை நிதி உதவி வழங்கும் திட்டம் அருமையான திட்டம் ஆகும்.
குமரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பேச்சிப்பாறை அணை தூர்வாரும் திட்டம் மற்றும் மாத்தூர் பாலத்தில் பாசனத்துக்கு செல்லும் நீர் வழித்தடங்களையும் தூர்வரும் திட்டத்தையும் அரசு பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. குமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை, தக்கலை உள்ளிட்ட சில இடங்களில் உழவர் சந்தைகளை விரிவு படுத்தும் திட்டமும் அறிவிக்கபடவில்லை. மொத்தத்தில் பட்ஜெட்டை பாராட்டுகிறேன்.
வரவேற்கத்தக்கது
பூமி பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பத்மதாஸ்:-
மாற்று பயிர் சாகுபடி முறையை ஊக்குவிக்கும் திட்டம் நல்ல திட்டம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த நிதியை அதிகரிப்பதன் மூலம் இத்திட்டம் முழு வெற்றியடையும். வேளாண் கடன் வழங்கும் விரிவான திட்ட தயாரிப்பு, இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, பயிர் காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களாக உள்ளது. குமாி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல சாலைகள் முறையாக செப்பனிட வேண்டும். குமரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பொறியாளர் பிரிவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே வேளாண் பொறியியல் பிரிவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம்.
மகிழ்ச்சி அளிக்கிறது
முன்னோடி விவசாயி கொட்டூர் ஹென்றி :
வேளாண் பட்ஜெட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தி, சிறுதானிய உற்பத்திக்கு ஊக்கம். உழவர் சந்தைகளை மாலை வரை செயல்பட வைப்பது, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் போன்றவை மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் காய் கறி உற்பத்தி செய்யவும், அவற்றை கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. தேனீ வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, குமரி மாவட்டத்திலுள்ள தேனீ வளர்ப்போரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதே வேளையில் குமரி மாவட்டத்தில் வாழை மற்றும் அன்னாசி போன்ற பயிர்களுக்கான மதிப்புக் கூட்டு மையங்கள், தேனீ ஆராய்ச்சி மையம் போன்றவற்றை எதிர்பார்த்தோம், அது குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் வேளாண் பயிற்சிக் கூடங்கள் அமைத்து வேளாண் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் திட்டங்களையும் பட்ஜெட் உரையில் எதிர்பார்த்தோம். மொத்தத்தில் படஜெட் வரவேற்கத்தக்கது.
இயற்கை விவசாயம்
திற்பரப்பு தேனீ வளர்ப்பு விவசாயி ஜூடஸ்குமார்:- ேவளாண்மைக்கு தனி பட்ெஜட் தாக்கல் செய்வது மகிழ்ச்சியானது. தேனீ வளர்ப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கியிருப்பது நல்லது. தேனீ வளர்ப்போரை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு நிதி ஒதுக்கீடு என்பது வரவேற்புக்குரியது. காப்பீடு விவசாயிக்கு பலன் தரும். பயிர் காப்பீட்டுக்கு போதிய நிதி ஒதுக்காதது வருத்தமே. உரத்துக்கான மானியத் தொகை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு உதவ முடியும்.
ஆற்றூர் ரப்பர் விவசாயி சிங்:- மரம் வளர்க்கும் திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கியிருப்பது, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என கூறியிருப்பது விவசாயத்தை ஊக்குவிக்கும். திருவாரூரில் விளை பொருட்களுக்குரிய விலையை பெற ெதாழிற்பேட்டை அமைக்கப்படும் என்றுள்ளனர். இதை அனைத்து வட்டத்திலும் விரிவுபடுத்த வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story