ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 20 March 2022 5:42 PM IST (Updated: 20 March 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதற்கு தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரவேற்றுள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதற்கு தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரவேற்றுள்ளது.
சங்க காலம்
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் இயற்கையான உப்பங்கழிகளால் தொன்மையான பல துறைமுகங்களையும், வெளிநாட்டு வணிகத் தொடர்பையும் சங்க காலம் முதல் கொண்டிருந்து உள்ளது. இதை அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம், தேரிருவேலி அகழாய்வுகள் மூலம் அறிய முடிகிறது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிலைகள், கோவில்கள், கல்வெட்டுகள் போன்றவை கடற்கரைப் பாறைகளால் உருவாக்கப்பட்டவை. ஆதலால் இவை எளிதில் சேதமடைந்து விடுகின்றன. இதனால் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் பல வரலாற்று தடயங்கள் அழிந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததால் இங்கு அதிக அளவிலான தொல் பொருட்களைப் பாதுகாக்க இயலாத நிலை இருந்து வந்தது. 
இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அரசு அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு தொல்லியல் ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த மாவட் டத்தில் உள்ள அதிக அளவிலான தொல் பொருட்களை பாதுகாக்க முடியும்.
தொன்மை பாதுகாப்பு
மேலும் மாணவர்களிடையே தமிழ், தொல்லியல், மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தவும் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 2009-ல் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் தொடங்க அரசு அறிவித்து செயல்படுத்தியது. இதை தற்போது அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தியது வரவேற்கத்தக்கது. 
தொல்லியல், தமிழ் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளால் மாணவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள். இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story