உடுமலையில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது


உடுமலையில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது
x
தினத்தந்தி 20 March 2022 6:50 PM IST (Updated: 20 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது

உடுமலை:
உடுமலையில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கோடை வெயிலை சமாளிக்க நுங்கு
கோடை வெயிலை சமாளிக்க இயற்கை தரும் கொடையே நுங்கு.கோடைகாலத்தில் மிகவும் புகழ்பெற்றது நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைகாலத்தில் குளிர்பானத்தை அருந்துவதைவிட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
மருத்துவ பயன்கள்
நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. இதில் உள்ள நீர் வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. ஆனால்பனைநுங்கை சாப்பிட்டால் அவர்களது தாகம் அடங்கும். 
விற்பனை அமோகம்
இத்தகையசிறப்புகளைக் கொண்ட நுங்கு விற்பனை உடுமலையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.வியாபாரிகள் சிறிய சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர். உடுமலையில் நேற்று ஒரு நுங்கு ரூ.8 வீதம் விற்பனை செய்யப்பட்டது.
 இவை குலைகுலையாக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் நுங்கு எங்கு கிடைக்கும் என்று தேடி வந்து பார்சலாக வாங்கி செல்கின்றனர். 
சில வியாபாரிகள்நுங்கு குலைகளை கயிற்றால் கட்டி, இருசக்கர வாகனங்களில் வீதி வீதியாகச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

Next Story