அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற விவசாயி மற்றும் குடோன் கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற விவசாயி மற்றும் குடோன் கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
தாராபுரம்:
தாராபுரத்தில் வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற விவசாயி மற்றும் குடோன் கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த விவசாயி ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கி ஒன்றில் 1,850 நெல் மூட்டைகளை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த 1,850 நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பை பெருந்துறையின் தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.சி.எம்.எல். நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அந்த நிறுவனம் தாராபுரம் தச்சன்புதூரில் தனியாருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து அங்கு 1,850 நெல்மூட்டைகளை வைத்தனர். இந்த நெல் குடோனை கண்காணிக்க எஸ்.சுரேஷ்குமார் மற்றும் எம்.சுரேஷ்குமார் ஆகிய இருவரை என்.சி.எம்.எல் நிறுவனம் நியமித்தது.
இந்த நிலையில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 1,850 நெல் மூட்டைகளை கடன் பெற்ற விவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ்குமார் மற்றொரு எம்.சுரேஷ்குமார் ஆகிய மூவரும் கூட்டுச்சேர்ந்து நெல் மூட்டைகளை திருடி விற்பனை செய்துள்ளனர். ஆனால் நெல் மூட்டைகள் குடோனில் இருப்பதாக சுரேஷ்குமார் மற்றொரு சுரேஷ்குமார் இருவரும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இதற்காக வங்கி நிர்வாகத்தினர் மாதந்தோறும் அவருக்கு சம்பளத் தொகை வழங்கி வந்தனர்.
நெல்மூட்டைகள் திருட்டு
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் குடோனை ஆய்வு மேற்கொள்வதற்காக வங்கியிலிருந்து குடோனுக்கு சென்று திறந்து பார்த்த போது அங்கு நெல் மூட்டைகளை காணவில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகம் என்.சி.எம்.எல். பெருந்துறையை சேர்ந்த ஆபத்து மற்றும் மீட்பு மேலாளர் தேவராஜிடம் புகார் செய்தனர். மேலும் குடோன் பாதுகாப்பு நிர்வாகம் கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ்குமார் மற்றொரு எம்.சுரேஷ் குமார், விவசாயி ராஜ்குமார் ஆகியோர் நெல் மூட்டைகளை திருடிவிட்டதாக அவர்கள் மீது தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நெல் மூட்டைகளை திருடிய விவசாயி மற்றும் கண்காணிப்பாளர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
3 பேர் கைது
அதன் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயி மற்றும் கண்காணிப்பாளர்கள் 2 பேரும் நெல்மூட்டைகளை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் கைது செய்து சிறையில் அடைத்தனர். வங்கியில் கடன் பெற்று கொண்டு நெல் மூட்டைகளை விவசாயி மற்றும் கண்காணிப் பாளர்கள் கொள்ளையடித்த சம்பவத்தால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story