ஒவைசி கட்சியின் கூட்டணி அழைப்பு, சிவசேனாவின் இந்துத்வா கொள்கையை இழிவுபடுத்த பா.ஜனதா செய்யும் சதி- உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
ஒவைசி கட்சியின் கூட்டணி அழைப்பு சிவசேனா இந்துத்வா கொள்கையை இழிவுபடுத்த பா.ஜனதா செய்யும் சதி என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
ஒவைசி கட்சியின் கூட்டணி அழைப்பு சிவசேனா இந்துத்வா கொள்கையை இழிவுபடுத்த பா.ஜனதா செய்யும் சதி என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கூட்டணிக்கு தயார்
ஐதராபாத் எம்.பி. ஆசாதுதீன் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த அவுரங்காபாத் தொகுதி எம்.பி. இம்தியாஸ் ஜலீல், சமீபத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவை சந்தித்தார். அப்போது, ஆளும் மகாவிகாஸ் அகாடியுடன் கூட்டணி வைக்க தங்கள் கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், “அரசியல் தலைவர்கள் எப்போதும் எம்.ஐ.எம். கட்சி பா.ஜனதாவின் ‘பி' டீம் என குற்றம் சாட்டுகின்றனர். எங்களால் தான் ஓட்டுகள் சிதறி பா.ஜனதா வெற்றி பெறுகிறது என்று கூறுகிறார்கள். எனவே இந்த புரிதலை அகற்ற எம்.ஐ.எம். கட்சி மராட்டிய அளவில் மகாவிகாஸ் அகாடியுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் சிவசேனா கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலமாக கலந்தாலோசனை நடத்தினார். அப்போது, எம்.ஐ.எம். கட்சியின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவின் ‘பீ’ டீம்
நாங்கள் தூங்கும்போது கூட எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். ஆனால் எம்.ஐ.எம். கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை பா.ஜனதாவின் பின்புலத்தில் இருந்து வந்துள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் எம்.ஐ.எம். கட்சி பா.ஜனதாவின் ‘பீ’ டீம் என்பதை இப்போது நாடு முழுவதும் உணர்ந்துள்ளது.
எம்.ஐ.எம். கட்சியை பயன்படுத்தி வாக்குகளை பிரிக்கவும் தனது அரசியல் எதிரிகள் மீது அவதூறு செய்யவும் பா.ஜனதா முயற்சிக்கிறது.
சிவசேனா பா.ஜனதாவுடன் தான் தனது உறவை முறித்துக்கொண்டது. இந்துத்வாவுடன் இல்லை. நாங்கள் இந்துத்வாவுக்காக அரசியல் செய்கிறோம். ஆனால் அவர்கள் இந்துத்வாவை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனப் சேனா
இதேபோல உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கட்சிக்கு எம்.ஐ.எம். கட்சி அழைப்பு விடுத்தது குறித்து நேற்று பேசிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவை ‘ஜனப் சேனா’ என்று கிண்டலடித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
2015-ம் ஆண்டு பிரிவினைவாத “மக்கள் ஜனநாயக கட்சி”யுடன் இணைந்து ஜம்மு- காஷ்மீரில் ஆட்சி அமைத்த பா.ஜனதாவை போல சிவசேனாவால் வெட்கக்கேடாக நடந்துகொள்ள முடியாது. ஆட்சியே கிடைக்கும் என்றாலும் நாங்கள் எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணிக்கு செல்லமாட்டோம்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக உங்களை ஹிஜ்புல் ஜனதா என்று அழைக்கலாமா?
பஞ்சாயத்து தொடங்கி பாராளுமன்றம் வரை முழு நாட்டையும் ஆளவேண்டும் என பா.ஜனதா சர்வாதிகார போக்கை எதிர்த்து நாம் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story