மாவட்டத்தில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் மேலாண்மைக்குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருக்கண்டேஸ்வரத்தில் கலெக்டர் பங்கேற்பு
கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது குறித்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருக்கண்டேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்
கடலூர்
பள்ளி மேலாண்மை குழு
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக்குழுக்களை மறுக்கட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்து இக்குழுக்களை சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், (1185 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்) அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் களுக்கும் பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கலெக்டர் பங்கேற்பு
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், நடந்த பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு
கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் கடமை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு வழங்க உள்ளனர்.
பள்ளி மேலாண்மைக்குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். இக்குழுவின் தலைவராக அப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
முன்னுரிமை
மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர், அப்பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோராக உள்ள தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவரே துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார்.தலைமை ஆசிரியர் குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக இருப்பார். எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 ஆண்டுக்கு ஒருமுறை இக்குழு மாற்றி அமைக்கப்படும்.
தரமான கல்வி
பள்ளி மேலாண்மைக்குழுவின் பணிகளாக பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு, பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழுந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள். 6 வயது முதல் 18 வரையுள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகைப்புரிவதை உறுதி செய்தல், பள்ளி சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல், பள்ளிக்கு தேவையான வளங்களை பெறுவதற்காக பள்ளி மேம்பாட்டுத்திட்டம் தயாரித்தலில் பங்கெடுத்தல் போன்ற பணிகளை செய்வார்கள். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், தலைமை ஆசிரியர் தேவநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story