குறைந்து வரும் பூண்டி ஏரியின் நீர்மட்டம்; ஆந்திராவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் முயற்சி


குறைந்து வரும் பூண்டி ஏரியின் நீர்மட்டம்; ஆந்திராவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் முயற்சி
x
தினத்தந்தி 20 March 2022 9:53 PM IST (Updated: 20 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து தண்ணீர் பெற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

பூண்டி ஏரி

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்த விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. இதனால், நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதன் காரணமாக உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது. சென்னை நகர மக்களின் ஆண்டு ஒன்றுக்கு குடிநீர் தேவை 12 டி.எம்.சி. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி வீணாக தண்ணீர் கடலில் கலப்பது தவிர்க்க, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஆயினும் பூண்டி ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் இருந்து ஓடைகளின் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இதனை கருத்தில்கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு சராசரியாக 300 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டது.

பூண்டி ஏரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் உள்ள ஓடைகளில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று போனதால் கடந்த 1-ந் தேதி முதல் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நீர்மட்டம் குறைந்து வருகிறது

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 31.39 அடியாக பதிவாகியது. 2.080 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story