கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த பஸ் விபத்துகளில் 2,951 பேர் உயிரிழப்பு-அதிர்ச்சி தகவல்
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த பஸ் விபத்துகளில் 2,951 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த பஸ் விபத்துகளில் 2,951 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2,951 பேர் சாவு
துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பலவள்ளிகட்டே பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகளான அக்காள்-தங்கை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பஸ் டிரைவர் வேகமாகவும், அலட்சியமாகவும் பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது.இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் நடந்த பஸ் விபத்துகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு பஸ் விபத்துகளில் 2,951 பேர் உயிரிழந்து உள்ளனர். 2016-ம் ஆண்டு 722 பேரும், 2017-ல் 753 பேரும், 2018-ல் 740 பேரும், 2019-ல் 559 பேரும், 2020-ல் 177 பேரும் பஸ் விபத்துகளில் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர்.
அலட்சியமே காரணம்
அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் கர்நாடகமும் உள்ளது. தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களும் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் உள்ளது. இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் நரேந்திர ஒலேகர் கூறும்போது, ‘கர்நாடகத்தில் நடந்த பஸ் விபத்துகளுக்கு டிரைவர்களின் அலட்சியம் தான் காரணம்.
அதிவேகமாக பஸ்களை ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது, வேகத்தடை, குழிகளில் பஸ்களை இறக்குவது உள்பட டிரைவர்கள் செய்யும் அலட்சியத்தால் தான் விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒய்.என்.ஒசக்கோட்டே-சித்ரதுர்கா வழித்தடத்தில் இயங்கிய 2 பஸ்களை பறிமுதல் செய்து இருந்தோம். பலவள்ளிகட்டேயில் நடந்த விபத்துக்கு டிரைவரின் அலட்சியமே காரணம்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story