தூத்துக்குடி அருகே பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கம் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பார்வையிட்டனர்


தூத்துக்குடி அருகே பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கம் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 20 March 2022 11:22 PM IST (Updated: 20 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பனை மரம் ஏறும் கருவி
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் எளிதாக பனை மரம் ஏறும் வகையில் புதிய கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் செயல்பாடு குறித்த செயல்விளக்க முறைகள் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பனையேறும் கருவி செயல்படும் விதத்தை ஆய்வு செய்தனர். 
தொடர்ந்து அட்மா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பனை மரம் ஏறும் கருவியை பயனாளிகளுக்கு வழங்கினர். 
பாதுகாப்பு
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பனை தொழிலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய பனைகள் வளர்ப்பு, பனைகளை பாதுகாப்பது முக்கியமாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் பனை ஏறுவதற்கே அதிகமாக தயக்கம் உள்ளது. அதில் உள்ள ஆபத்தை நினைத்து பல இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் தயாரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பல இடங்களில் பனை ஓலைகள் காய்ந்து பனை மரங்கள் பட்டுப்போகும் நிலை உள்ளது. 
இந்த நிலையில் தென்னை மரம் ஏறுவதற்காக ஒரு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரத்தில் மாற்றம் செய்து புதிய எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. பனை தொழிலை பாதுகாப்பாக செய்வதற்காக இந்த எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
பதனீர் குடித்தனர்
முன்னதாக, கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் பதனீர் குடித்தனர். 
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், துணை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம், துணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சகாயமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
அங்கன்வாடி மையங்கள் 
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மங்களாபுரம், திரேஸ்புரம், வி.வி.டி. பூங்கா, வரதராஜபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா மங்களபுரத்தில் நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். 
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்தது. 
கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும்போது, சில இடங்களில் செய்யப்பட்ட மாற்று முறையால் மழைநீர் அப்படியே தேங்கி கிடந்தது. எனவே அந்த பணிகளை சரிசெய்ய உரிய துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 60 பணிகளில் 35 பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள பணிகள் 70 சதவீதத்துக்கு மேல் நடந்து வருகின்றன. 
மேலும் மீதமுள்ள பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கம்
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருங்கால பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சின்னத்தாய்           வரவேற்றார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில் முனைவோருக்கான கைவினை கண்காட்சி, உணவுப்பொருள் மற்றும் மூலிகை கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.

Next Story