வாலாஜா ஒன்றியத்தில் 3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள். அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்


வாலாஜா ஒன்றியத்தில் 3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள். அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 March 2022 11:50 PM IST (Updated: 20 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா ஒன்றியத்தில் 3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மலை மேடு, நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர், குடிமல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் 3 புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை ஏற்று பகுதிநேர ரேஷன் கடைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகப்படியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற பகுதி நேர ரேஷன் கடைகள் கிடையாது. முழுநேர ரேஷன் கடைகள் 294 உள்ளன. பகுதி நேர ரேஷன் கடைகள் 298 உள்ளன. கட்சி பேதம் இல்லாமல் மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற அரசு நம்முடைய அரசு. முன்பெல்லாம் அரசை தேடி மக்கள் செல்வார்கள். ஆனால் நம்முடைய ஆட்சியில் மக்களைத் தேடி அரசு வருகிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அடிப்படை தேவைகளான வேளாண்மை, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெரும்பாலோனோர் பயன்பெறும் அளவிற்கு உள்ளது என்றார்.

விழாவில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் செ.வெங்கட்ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் சரஸ்வதி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story