பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கரூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
கரூர்,
பள்ளி மேலாண்மை குழு
அரசு பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள பள்ளி மேலாண்மைக்குழு குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விளக்க கூட்டம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாகவும், மாணவ-மாணவிகளின் நலனுக்காக எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கொரோனா தொற்றுப்பரவல்
அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதின் அடிப்படையிலும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்குழுக்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் மறுகட்டமைப்பு செய்ய இயலாமல் இருந்தது.
20 உறுப்பினர்கள்
ஒவ்வொரு அரசு பள்ளியிலும் அமைக்கப்பட உள்ள பள்ளி மேலாண்மை குழுக்களில் 20 நபர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களில் 15 பேர் பெற்றோர்கள், அதிலும் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் இருப்பர்.
குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவர் துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
தலைமையாசிரியர் குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக இருப்பார். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கரூர், தோகைமலை
கரூர் மாநகராட்சி ஜெயபிரகாஷ் நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தோகைமலை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை ஜெயமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
நொய்யல்
நொய்யல் அருகே குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை ஆசிரியை வளர்மதி பள்ளி மேலாண்மை குழு பற்றியும், பள்ளியின் வளர்ச்சி, மாணவர் சேர்க்கை, பள்ளிக்கு கல்விச்சீர் வழங்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். அப்போது பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.
கரைப்பாளையத்தில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை லதா பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். அதேபோல் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story