4 வழிச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை
மயிலாடுதுறையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்டும் பணிக்கான வரைபடங்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் லலிதா, கலெக்டர் அலுவலக கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினார்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி 18 மாதங்களில் முடிக்க வேண்டும். மண் பரிசோதனையில் மண் இலகுவாக இருப்பது தெரியவந்ததால் இங்கு 30 முதல் 35 மீட்டர் ஆழம்வரை பைல் பவுண்டேஷன் மேற்கொண்டு கட்டிடம் கட்ட வேண்டும். அதனால் பணி சற்று தாமதமாக ஏற்பட்டுள்ளது.
பவுண்டேஷன் பணி முடிந்தவுடன் கட்டிடம் விரைவாக கட்டி முடிக்கப்படும். இந்த கட்டிடத்தில் 35 அரசுத்துறைகள் மற்றும் இணைத் துறை, சார்புத் துறை என 60-க்கும் மேற்பட்ட துறைகள் இடம் பெற உள்ளன.
4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை
மயிலாடுதுறை- திருவாரூர் இடையே 36 கி.மீ. தூரத்திற்கு சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. ரூ.105 கோடி மற்றும் ரூ.103 கோடி என 2 பணிகளாக பிரித்து 2 ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க உள்ளோம்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டுவதற்கு போலீஸ் ஆணையரகம் அதற்கான பணிகளை மேற்கொள்ளும். மயிலாடுதுறையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாத், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story