ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவிலில் 33 அடி உயர நுழைவுவாயிலுக்கு கும்பாபிஷேகம்
ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவிலில் 33 அடி உயர நுழைவுவாயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கரூர்,
கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் பிரசித்தி பெற்ற ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள அடிவாரத்தில் கரூர் புத்தாம்பூர் மாரியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இளங்கோவன் சார்பில் 33 அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில் கட்டப்பட்டது. மேலும், பல்வேறு வேலைப்பாடுகளுடன் பல லட்சம் ரூபாய் செலவில் நுழைவு வாயில் நடுவில் சிவலிங்கமும், அதனை சுற்றிலும் 20 சுவாமி சிலைகள் மற்றும் 18 சித்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை கோவை மனோகரன் ஸ்தபதி குழுவினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிதாக கட்டப்பட்ட நுழைவுவாயில் கும்பாபிஷேக விழா நிலத்தேவர் வழிபாட்டுடன் தொடங்கியது. பின்னர் யானை, பசுவுடன் கங்கை, காசி போன்ற பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு தீர்த்த ஊர்வலமும், முதற்கால யாக வேள்வியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசூர் ஆசிரியர் ராமசாமி தலைமையில் ஆனந்த கும்மி கலைக்குழுவினரின் வள்ளி கலைக்கும்மி நிகழ்ச்சியும், கோவை வானதி கலைக்குழுவினர் ரஞ்சிதா தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ வாழ்த்தி பேசினார்.
2-ம்நாள் காலை இரண்டாம் கால வேள்வியும் கடங்கள் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியினை தஞ்சாவூர் தினேஷ் குழுவினர் மேற்கொண்டனர். கும்பாபிஷேகத்தை மாரியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இளங்கோவன் நடத்தி வைத்து பேசினார். கும்பாபிஷேக வர்ணனையினை கரூர் மேலை பழனியப்பன் நிகழ்த்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் குழுவினரின் கைலாய வாத்தியம், திண்டுக்கல் மல்டி பாஸ்கரன் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாரியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இளங்கோவன், மீனாட்சி, பிரபாகரன், சூர்யபிரியா, சூர்யா, விஜய் ஆனந்த், கவின் கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story