அந்தியூர் அருகே பாசமாக வளர்த்த நாய் திடீர் சாவு; கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்
அந்தியூர் அருகே பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் பொதுமக்கள் கண்ணீா் அஞ்சலி போஸ்டர் ஒட்டினாா்கள்.
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுபாளையம் அண்ணாசாலை குறுக்கு- 1 பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டு நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு மணி என பெயரிட்டு அழைத்து வந்தார். இந்த நாயானது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாக பழகி வந்தது. அனைவர் வீட்டுக்கும் சென்று வரும். இதனால் அனைவரும் அந்த நாயின் மேல் பாசமாக இருப்பர். தினமும் அதிகாலை 3 மணி அளவில் அந்த நாயின் சங்கிலியை முத்து அவிழ்த்து விடுவார். காலை 6 மணி அளவில் மீண்டும் தானாகவே வந்துவிடும். பின்னர் அந்த நாயை முத்துவின் வீட்டில் உள்ளவர்கள் குளிப்பாட்டி உணவு வழங்குவார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் நாயை முத்து அவிழ்த்து விட்டு உள்ளார். ஆனால் அந்த நாய் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து நாயை தேடினர். அப்போது வீட்டின் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டதும் வருத்தம் அடைந்தார். இதுபற்றிய தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்து கிடந்த நாைய கண்டு கண் கலங்கினர். ஆனால் இறப்புக்கான காரணம் அங்குள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த நாயை தவுட்டுப்பாளையம் மயானத்துக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து புதைத்தனர். மேலும் நாயை புதைத்த இடத்தில் நேற்று நாய்க்கு பால், நெய் ஆகியவற்றை ஊற்றினர். பின்னர் அந்த நாய் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை படைத்து வழிபட்டனர். மேலும் புதைத்த இடத்தில் மாலைகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒட்டினர். இந்த சம்பவம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story