பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை
பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை நடந்தது. இன்று சமபந்தி விருந்து நடக்கிறது.
தக்கலை:
பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை நடந்தது. இன்று சமபந்தி விருந்து நடக்கிறது.
பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு தலமாக உள்ளது. இங்கு இந்துகள் சூடம் ஏற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபடுவார்கள். மேலும், முஸ்லிம்கள் அவர்கள் முறைப்படி வழிபாடு நடத்துவார்கள். இங்கு ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழா மற்றும் சமபந்தி விருந்து நடைபெறும். இந்த ஆண்டு மதநல்லிணக்க விழா நேற்று நடந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. திருத்தல அறக்கட்டளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாமிதோப்பு அய்யாவழி சுவாமி சிவராஜ், பள்ளியாடி இயேசுவின் திருஇருதய ஆலய பங்குதந்தை பெனடிட், இரவிபுதூர்கடை ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் ஆகியோர் பேசினர். இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மதங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அவரவர் மத வழக்கப்படி வழிபாடு நடத்தினர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சமபந்தி விருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விருந்து சாப்பிடுவார்கள். இதையொட்டி நேற்று காலை முதல் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தினர். நேற்று இரவு பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக அமர்ந்து காய்கறிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை பழைய பள்ளி அப்பா திருத்தல நிர்வாகிகள் செய்திருந்தனர்.
---
Related Tags :
Next Story