துமகூருவில் விபத்தில் சகோதரிகள் உள்பட 6 பேர் சாவு; தலைமறைவாக இருந்த தனியார் பஸ் டிரைவர் கைது


துமகூருவில் விபத்தில் சகோதரிகள் உள்பட 6 பேர் சாவு; தலைமறைவாக இருந்த தனியார் பஸ் டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 March 2022 2:45 AM IST (Updated: 21 March 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் விபத்தில் சகோதரிகள் உள்பட 6 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு:
  
6 பேர் சாவு

  துமகூரு மாவட்டம் ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து நேற்று காலையில் பாவகடாவுக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ், பலவள்ளி கட்டே கிராமத்தில் வரும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மாணவர்கள், சகோதரிகள் உள்பட 6 பேர் பலியாகி இருந்தார்கள். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  படுகாயம் அடைந்தவர்கள் துமகூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் டிரைவர் கைது

  போலீஸ் விசாரணையில், டிரைவர் செல்போன் பேசியபடி பஸ்சை அதிவேகமாக ஓட்டியதால், அவருடைய கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விதிமுறைகளை மீறி தனியார் பஸ்சில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதுடன், பஸ்சின் மேற்கூரையில் அமர வைத்து பயணிகளை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

  இந்த விபத்தில் பலியான சகோதரிகளான ஹர்சிதா, அமுல்யாவின் உடல்களுக்கு நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது. இதற்கிடையில், விபத்து காரணமான பஸ் டிரைவர் ரகு தலைமறைவாக இருந்து வந்தார். அவரை நேற்று பாவகடா போலீசார் கைது செய்துள்ளனர். அவர், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக பாவகடா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மந்திரி நலம் விசாரித்தார்

  இந்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களுக்கு பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் துமகூரு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலையில் துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நபர்களிடம் நலம் விசாரித்தார்.

  மேலும் விபத்திற்கான காரணம் பற்றி போலீஸ் அதிகாாகளிடம் அவர் கேட்டு அறிந்து கொண்டார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டுள்ளார். இதுபோல், துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களது குடும்பத்தினருக்கும் குமாரசாமி ஆறுதல் கூறினார்.

கூடுதலாக 4 அரசு பஸ்கள் இயக்கம்

துமகூருவில் நடந்த விபத்தில் ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடாவுக்கு குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், தனியார் பஸ்களே அந்த வழித்தடத்தில் அதிகஅளவில் இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படாததால் தான் தனியார் பஸ்சில் 100-க்கும் மேற்பட்டோர் சென்று விபத்து நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடாவுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று மந்திரி ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடாவுக்கு நேற்று முதல் கூடுதலாக 4 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

மேற்கூரையில் அமர்ந்து சென்ற கண்டக்டர்

துமகூருவில் விபத்தில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் தனியார் பஸ் கண்டக்டரும் ஒருவர் ஆவார். அவர், கடந்த 8 ஆண்டுகளாக அந்த பஸ்சில் கண்டக்டராக வேலை செய்துள்ளார். 

நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் ஏற முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கண்டக்டரும் மாணவர்களுடன் சேர்ந்து மேற்கூரையில் அமர்ந்து சென்றிருந்தார். இதனால் மேற்கூரையில் இருந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்திருந்தார். டிரைவரின் கவனக்குறைவு, அதிக பயணிகள் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கண்டக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story