ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்


ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 March 2022 2:53 AM IST (Updated: 21 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009 படி அரசு பள்ளிக்கூடங்களை மேம்படுத்தவும், குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி பள்ளிக்கல்வித்துறை மூலம் மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்து குழுக்களை சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,281 அரசு பள்ளிக்கூடங்களில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதேபோல் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த முகாமுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்ல செல்வகுமார் கலந்துகொண்டு பேசினார். இதில் மனநல டாக்டர் அசோக் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்வி வளர்ச்சி
எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் தரப்பில் ஹேமலதா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ரேவதி திருநாவுக்கரசு, விஜயலட்சுமி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை ஆசிரியை கே.சுமதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் சேவியர் துரை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், பள்ளி மற்றும் கல்வி வளர்ச்சியில் இந்த குழுவின் பங்கு, மாணவர் சேர்க்கை, இடைநின்ற மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் சேர்த்தல், குழந்தை தொழிலாளர் இல்லாமையை உறுதிசெய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ரூபி நன்றி கூறினார்.
ஆலோசனை
ஈரோடு காவிரிரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை (பொறுப்பு) தங்கமணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் லக்குமி நரசிம்மன், விரிவுரையாளர் கவுரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுனர் கோமதி, ஆசிரியர்கள் லோகநாதன், பிரமிளா, சிங்காரவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story