மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் மீது வழக்கு
மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் சனிக்கிழமை இரவு என்றாலே, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆரம்பித்து, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி வரை சென்று மீண்டும் மெரினா வருவார்கள். மோட்டார் சைக்கிளில் இவர்கள் அதிவேகமாக சென்று பல்வேறு சாகசங்களையும் வழி நெடுக செய்து காண்பிக்கிறார்கள். இளைஞர்களுக்கு இது கொண்டாட்டமாக இருந்தாலும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் தொல்லையாக பார்க்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் இஷ்டத்துக்கு இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் காட்டுவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்களை விரட்டிப்பிடித்து போலீசார் வழக்கு போடுகிறார்கள்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று நள்ளிரவிலும் இதுபோல் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்று ஒரு இளைஞர் கூட்டம் சாகசத்தில் ஈடுபட்டது. இது பற்றி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்களை மடக்கி பிடித்தனர். 14 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற 7 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று இரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story