திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 26-ந்தேதி தேரோட்டம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புன்னைமர வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு கருடசேவை, கோபுர வாசல் தரிசனம், 24-ந் தேதி காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு சாமி திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் 7.30 மணிக்கு தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.
விழா நாட்களில் சேஷ வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, தங்க சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 30-ந் தேதி விடையாற்றியும், அன்று இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி கமிஷனர் கவெனிதா உள்பட கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story