விளாத்திகுளம் அருகே பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் மாணவிகள்
விளாத்திகுளம் அருகே படியில் தொங்கியவாறு மாணவிகள் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் அபாய நிலை இருக்கிறது
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே படியில் தொங்கியவாறு மாணவிகள் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் அபாய நிலை இருக்கிறது. பெரும் விபரீதம் நடப்பதற்குள் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி, பூசனூர், அரசனூர், புளியங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள், குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி குளத்தூர் வழியாக செல்லும் அரசு பஸ்சில் தமிழக அரசு வழங்கிய இலவச பயண அட்டையை பயன்படுத்தி சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போது பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிவதால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
பஸ் படிக்கட்டில் மாணவிகள்
சில நேரங்களில் மாணவிகளும் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணிக்கும் பரிதாப நிலையும் இருக்கிறது.
இதனால் அடிக்கடி பஸ்சில் இருந்து மாணவர்கள் தவறி விழுந்து காயம் பட்டு வருகின்றனர். இதை தடுக்க கூடுதல் பஸ்களை இயக்க இப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கூடுதல் பஸ்களை இயக்க...
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாணவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பஸ்மறியலில் ஈடுபட முயற்சித்தனர். விளாத்திகுளம் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து கூட்டநெரிசலில் மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூடுதலாக பஸ்களை இயக்க அறிவுறுத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இப்பகுதியில் ெபரும் விபரீதம் நிகழ்வதற்குள் கூடுதல் பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story