திருவள்ளூர், திருத்தணியில் பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம்


திருவள்ளூர், திருத்தணியில் பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 7:27 PM IST (Updated: 21 March 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், திருத்தணியில் பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் பேரில், பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை மார்ச் 20-ந் தேதி நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

இந்த குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக அந்த பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் தான் நியமிக்கப்படுவார்கள். இந்த குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியர் இருப்பார்.

குழுவின் செயல்பாடுகள்

இதனையடுத்து, நேற்று திருத்தணி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருத்தணி எம்.எல்.ஏ.சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இக்கூட்டத்தில் திருவள்ளூர் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, நகர் மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், கவுன்சிலருமான ஷியாம்சுந்தர், தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, மாணவர்களின் இடைநிற்றல் கல்வி, ஆரோக்கியம், மாணவர்கள் விடுப்பு இல்லாமல் பள்ளிக்கு வருவது, பள்ளியின் சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேபோல், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை வினோலினா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பொன்னுதுரை, கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், சமூக ஆர்வலர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கலந்துகொண்டு கூட்டத்தை துவக்கி வைத்தார்.


Next Story