ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என பல்வேறு பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக மனு கொடுதது வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மட்டகடை, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி, திரேஸ்புரம், ஜார்ஜ் தெரு, பூபாலராயர்புரம், தருவைரோடு, கோவில் பிள்ளை தெரு, கீதாஜீவன் நகர், அய்யனடைப்பு, சாமிநத்தம், பண்டாரம்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் 25 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கும்போது தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் நன்றாக இருந்தது. தற்போது மூடி இருப்பதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். மீன் வியாபாரம் செய்பவர்கள், பாதிக்கப்படுகிறார்கள், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கிறார்கள், இங்கு வேலை பார்த்தவர்கள் ஆலை மூடபட்டுள்ளதால் வெளியூர் சென்று வேலை பார்க்க கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தின் வாழ்வாதாரம் ஸ்டெர்லைட் காப்பர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்கள் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் அந்த ஆலை மூலம் வேலையை பெற்று வந்தோம். தற்போது இந்த ஆலை மூடி கிடப்பதால் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து உள்ளனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். எனவே இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story