தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தெருக்களில் கட்டிட கழிவுகள்
திண்டுக்கல் நாகல்நகரில் ஒருசில தெருக்களில் கட்டிட கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. எனவே தெருக்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் தெருக்களில் கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். -ராஜா, திண்டுக்கல்.
தெருநாய்கள் தொல்லை
பழனி பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் பயணிகள் அமரும் இடத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி பயணிகள் மீது பாய்வதால், அவர்கள் அச்சத்துடன் அமரும் நிலை உள்ளது. எனவே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். -ஈஸ்வரன், பழனி.
வீணாகும் குடிநீர்
தேனி அல்லிநகரத்தில் பல இடங்களில் குடிநீர் குழாயை மூடி வைக்காமல் திறந்து போட்டுள்ளனர். இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது, குடிநீர் வீணாக வெளியேறி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீரை வீணாக்காமல் சேமிப்பது முக்கியமானது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரகுரு, அல்லிநகரம்.
சேதம் அடைந்த நடைபாதை
நத்தம் அருகே கோபால்பட்டி கடைவீதியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதம் அடைந்து விட்டது. எனவே பக்தர்களின் நலன்கருதி தரமான நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், கோபால்பட்டி.
பள்ளி அருகே குப்பைகள்
பழனி அருகே அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் குப்பைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும். -சுந்தரம், பழனி.
----
Related Tags :
Next Story