‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 March 2022 8:53 PM IST (Updated: 21 March 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீர் பாலம் சரி செய்யப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சோகண்டி கிராமம் மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் பாலம் சேதமடைந்து உள்ளது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இது தொடர்பாக அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையில் பாலத்தில் சேதமடைந்திருந்த பகுதி சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சாலைவாசிகள் துரிதமாக செயல்பட்ட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

போதிய வெளிச்சமில்லை

சென்னை நுங்கம்பாக்கம் கிரமா தெருவில் உள்ள மின்விளக்குகளுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி விட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதனால் தெருக்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. தெருவை கடக்க போதிய வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை கவனித்து இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

- தீபன், நுங்கம்பாக்கம்.

மூடப்படாத பள்ளங்கள்...

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி பேட்டை அருகில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே செல்போன் டவருக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இவை கடந்த 2 மாதங்களாக மூடாமல் கிடப்பில் இருக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெறும் இடையூறாக உள்ளது. கூடிய விரைவில் இந்த குழிகளை மூட உத்தரவிட வேண்டும்.

- ஆனந்தன், அண்ணா நகர்.



திறக்கப்படாத மேல்நிலை நீர்தேக்க தொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் கிராமம் ஓ.வி.அழகேசன் தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மிகவும் துன்பப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், ஒழலூர் கிராமம்.



சாலையில் தேங்கும் கழிவுநீர்

சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 நாட்களாக வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியபடி உள்ளது. மழைக்காலங்களில் தான் இது போன்ற பிரச்சினை என்றால் வெயில் காலத்திலும் இந்தநிலை தொடர்கிறது. சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. கழிவுநீர் அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

- செல்வகுமார், வேளச்சேரி.



சேதமடைந்த நடைபாதை சீரமைக்கப்படுமா?

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தின் அருகில் இருக்கும் நடைபாதை நீண்ட நாட்களாக சேதமடைந்து இருக்கிறது. மேலும் நடைபாதையில் குப்பைகளை கொட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நடைபாதையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமரன், சமூக ஆர்வலர்.



நடை மேம்பாலத்தில் விளக்கு சீராகுமா?

சென்னை ராஜீவ் காந்தி சாலை கந்தன்சாவடியில் காளியம்மன் கோவில் அருகே உள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மின் விளக்கு எரிவதில்லை. இதனால் படிக்கட்டுகள் இரவு நேரங்களில் சரியாக தெரிவதில்லை. முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகுந்த இடையூறாக உள்ளது. பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நடை மேம்பாலத்தில் பழுதடைந்த மின் விளக்கை விரைந்து சரி செய்து தர வேண்டும்.

- அருண்பிரசாத், பெருங்குடி.

ஒளிராத மின்விளக்கு

சென்னை மணலி திருவேங்கடம் தெரு மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகே மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரிவதில்லை. வயர்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. மின்வாரியம் கவனித்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும்.

- ராஜு, மணலி.

கூடுதல் பஸ் வசதி தேவை

சென்னை மீஞ்சூரில் இருந்து காட்டூர் வழியே பழவேற்காடு செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி பிராட்வேயில் இருந்து செல்லும் (தடம் எண்:56பி) பஸ்சை கட் சர்வீசாக மாற்றி காட்டூர் வழியே மீஞ்சூர் முதல் பழவேற்காடு வரை செலுத்தினால் மக்கள் பயன்பெறுவார்கள்.

- சேகர், மீஞ்சூர்.

குப்பைத்தொட்டி வசதி கிடைக்குமா?

சென்னை அடுத்த காட்டான்குளம் செல்லியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ரேஷன் கடை அருகில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கப்படாததால் குப்பைகளும், கழிவுகளும் சாலையில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இந்த இடத்தில் குப்பைத்தொட்டி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- செல்வகுமார், காட்டான்குளம்.


Next Story