குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்


குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 21 March 2022 8:59 PM IST (Updated: 21 March 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

குன்னூர்

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

கடும் வறட்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் நீர்நிலைகள் வறண்டதுடன் பசுந்தீவனங்களும் கருகின. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியைவிட்டு வெளியே வந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டம் இடம் பெயர்ந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தன. 

பின்னர் அந்த யானைகள் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தன. அவற்றை வனத்துறையினர் துரத்தினர். 

காட்டு யானைகள் புகுந்தன

இந்த நிலையில் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யாட்டு யானைகள் கூட்டம் குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தன. 

பின்னர் அங்கிருந்து வெளியேறிய யானைகள், தோட்டத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் கிளண்டேல் தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் தேவையான தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் உள்ளது. இதனால் அங்கு யானைகள் முகாமிட்டு உள்ளன. 

தீவிர கண்காணிப்பு

எனவே அந்த யானைகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எனவே இந்த தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் காட்டு யானைகள் நடமாடும் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story