வேலூரில் தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
வேலூரில் தொழிலதிபரின் வீடு புகுந்து 17 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் தொழிலதிபரின் வீடு புகுந்து 17 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை, பணம் திருட்டு
வேலூர் சலவன்பேட்டை பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 60), இவர் வேலூரில் வாகன டயர் டீலர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 19-ந் தேதி இரவு தீனதயாளன் குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கீழ்தளத்தில் உள்ள அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது. வீட்டின் முன் மற்றும் பின்பக்க கதவின் பூட்டு, ஜன்னல் கம்பி எதுவும் உடைக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீனதயாளன் குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
வாலிபர் கைது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டின் மாடி வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் அறையில் வைக்கப்பட்டிருந்த சாவி மூலம் பீரோவை திறந்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் அதேப்பகுதியை சேர்ந்த முரளி மகன் ராகுல்ராபர்ட் (வயது 19) தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பதுங்கிருந்த அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தொழிலதிபர் தீனதயாளன் வீடு புகுந்து நகை, பணம், வெள்ளிப்பொருட்கள் திருடியதும், அவற்றை தாயாரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ராகுல்ராபர்ட்டை போலீசார் கைது செய்து, நகை, பணம், வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாவும், இதுதொடர்பாக ராகுல்ராபர்ட் தாயாரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story