அன்னாசி பழம் விலை உயர்வு


அன்னாசி பழம் விலை உயர்வு
x
தினத்தந்தி 21 March 2022 9:59 PM IST (Updated: 21 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

முன்கூட்டியே தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேவை அதிகரிப்பால் அன்னாசி பழத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவட்டார்:
முன்கூட்டியே தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேவை அதிகரிப்பால் அன்னாசி பழத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
அன்னாசி உற்பத்தி
குமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் அன்னாசி விவசாயம் செய்யப்படுகிறது. முன்பு ரப்பருக்கு ஊடுபயிராக பூசணி, வெள்ளரி, கீரை உள்ளிட்ட காய்கறிப்பயிர்கள் மற்றும் வாழைகள் நட்டு வந்தனர். ஆனால் தற்போது ரப்பருக்கு ஊடுபயிராக அன்னாசி பயிரிடுகின்றனர்.
பேச்சிப்பாறை, மணக்காவிளை, திருவட்டார், கேசவபுரம், குலசேகரம், சேனங்கோடு, மணியன்குழி, அருவிக்கரை, மாத்தூர், கொட்டூர், வேர்க்கிளம்பி, மணலிக்கரை, சித்திரங்கோடு, குமரன்குடி, செங்கோடி, ஆற்றூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்னாசி பயிரிடப்பட்டு வருகிறது.
இரட்டை லாபம்
கடந்த 10 ஆண்டுகளில் அன்னாசி பழங்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரப்பர் தோட்டங்களே. ரப்பர் மரத்தை 25 ஆண்டுகள் வளர்த்து விட்டு அதை முறித்து புதிய ரப்பர் கன்றுகள் தோட்டங்களில் நடுவது வழக்கம். நடப்பட்ட கன்று ரப்பர் மரமாகி பால் வெட்டுவதற்கு 7 ஆண்டுகள் வரை ஆகும். 
இந்த இடைப்பட்ட காலங்களில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசியை பயிரிட குத்தகைக்கு வழங்குவார்கள். இதில் குத்தகைப்பணம் மற்றும் இலவசமாக ரப்பர் கன்றுகளுக்கு பராமரிப்பு என தோட்டத்து உரிமையாளர்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது. 
வறட்சியை தாங்கும் பயிர் என்பதால் தண்ணீர் தேவையும் குறைவு. வெயில் காலங்களில் தினசரி ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் காய்கள் நன்கு பருமனாகும். 
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது மார்க்கெட்டில் அன்னாசி பழங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்தே கொள்முதல் செய்து செல்கிறார்கள். இங்கு விளையும் அன்னாசி பழங்கள் சென்னை, விஜயவாடா, பெங்களூரு, மராட்டியம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 தற்போது கிலோ ரூ.50 என விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பழங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் 1½ கிலோவில் இருந்து 2½ கிலோ வரை இருப்பதால் ரூ.80 முதல் ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது. 
 கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் கிலோ வெறும் ரூ.15 ரூபாய்க்கும் கீழே சென்றது. தற்போது விலை உயர்ந்து காணப்படுவது அன்னாசி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
வரும் காலங்களில்...
இதுகுறித்து விவசாயி ஜூடஸ்குமார் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இருந்து தினசரி 20 டன்னுக்கு மேல் பல்வேறு பகுதிகளுக்கு அன்னாசி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
 இந்த ஆண்டு கோடைகாலம் முன்னதாகவே தொடங்கியதால் மக்கள் மத்தியில் அன்னாசி பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட உற்பத்தி அதிகரித்து இருந்தாலும் பழத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. வரும் காலங்களில் அதிகமான பரப்பளவில் அன்னாசி சாகுபடி செய்யும் நிலை வரும் என கூறினார். 

Next Story