உடுமலையில் டிவி பட்டிணம் தளிசாலையில் பணிகளால் பாதாள சாக்கடை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி
உடுமலையில் டிவி பட்டிணம் தளிசாலையில் பணிகளால் பாதாள சாக்கடை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை:
உடுமலையில் டி.வி. பட்டிணம் தளிசாலையில் பணிகளால் பாதாள சாக்கடை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாதாள சாக்கடை
உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சாலைப்பகுதியில் நீண்ட குழிதோண்டி பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதான குழாயில் ஆங்காங்கு ஆள் நுழை இறங்கு குழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் குழாய்கள், இந்த தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கு உள்ள ஆள்நுழை இறங்குகுழி தொட்டிக்கு சென்று, அங்கிருந்து பிரதான குழாய் மூலம் ஏரிப்பாளையத்தை அடுத்துள்ள நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.
தொட்டிகள்
இந்த திட்டத்தில் சாலைகளில் உள்ள ஆள்நுழை இறங்கு குழி தொட்டிகளின் மீது வாகனங்கள் அடிக்கடி செல்வதால், தொட்டிகளின் மூடிகள் அடிக்கடி உடைந்து விடுகிறது. சில நாட்கள் கழித்து அதை நகராட்சி நிர்வாகம் புதிய மூடிகள் பொருத்தி சுற்றிலும் கான்கிரீட் தளம் அமைத்து பழுதை சரிபார்த்து வருகின்றனர். இது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் உடுமலை டி.வி.பட்டிணம் பகுதியில் தளி சாலையில் அடுத்தடுத்து சில தொட்டிகளின் மூடிகள் பழுதடைந்து சாலைமட்டத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. அதனால் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பழுதடைந்துள்ள தொட்டிகளின் மூடிகளை அகற்றி விட்டு புதியதாக மூடி பொருத்தி அதை சுற்றிலும் கான்கிரீட் கலவை போடும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. அந்த இடம் சரியாக காய்வதற்குள், அதன் மீது வாகனங்கள் செல்லாத வகையில் அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டி.வி.பட்டிணம் தளிசாலையில் அடுத்தடுத்து 5 இடங்களில் பணிமுடிந்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதையடுத்துள்ள 2 தொட்டிகளின் மூடிகளை அகற்றி விட்டு புதியதாக மூடிகளை பொருத்துவதற்கான பணிகள் நேற்று நடந்தன. அந்த இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல்
அடுத்தடுத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு சாலையில் குறுகிய இடமே இருந்த நிலையில் நேற்று வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிர்எதிரே செல்லமுடியாதநிலை ஏற்பட்டது.
வரிசையாக நின்றவாகனங்கள் ஒரு புறம் இருந்து மறுபுறத்திற்கு சென்றபிறகு, எதிர்புறம் இருந்த வாகனங்கள் வந்தன. அதுவரை, போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் அந்த இடத்தில் வாகனபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால், சாலைப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும்போது, வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story