பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்த சேலம் பக்தர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு சேலம் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாகவும், கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று திருவிழாவின் கடைசி நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். அதன்படி சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த 4 பக்தர்கள் பழனி இடும்பன் கோவில் பகுதியில் இருந்து ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக சேலம் பகுதியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு தீர்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகிறோம். அதேபோல் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story