வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கோவில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தடுத்து நிறுத்தம்


வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கோவில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 21 March 2022 10:11 PM IST (Updated: 21 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கோவில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை அதிகாரிகள், போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கோவில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை அதிகாரிகள், போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுச்சுவர்

வேலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் அகோர வீரபத்திரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அகற்றாமல் வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் தரப்பினர் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்தனர். அதற்காக கட்டுமான பணிகளை தொடங்கினர்.
அதன்படி  சுவர் அமைப்பதற்காக கட்டுமான தொழிலாளர்கள் ஜல்லி கலவை மூலம் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கோவிலை சுற்றி சுற்றுச்சுவர், அனுமதியின்றி கட்டப்படுவதாக மாநகராட்சி தரப்பில் வேலூர் வடக்கு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தடுத்து நிறுத்தம்

மேலும், அங்கு மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோரும் வந்தனர். அவர்கள் கோவில் சுவர் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவில் தரப்பினரும், இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.
நோட்டீஸ் வழங்காமல் எவ்வாறு பணியை தடுக்கலாம் என இந்து முன்னணி நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும் ஏற்கனவே கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் இருந்தது. அது காலப்போக்கில் அழிந்து விட்டது. எனவே அதை கட்டுகிறோம். பணியை நிறுத்த அதிகாரிகள் முறையாக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. திடீரென பணியை தடுத்து நிறுத்தினர் என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் கோவில் தரப்பினரை மாநகராட்சி அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம்  புகார் மனு அளித்தனர். அவர் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Next Story