சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த 20 வாலிபர்கள் படுகாயம்
பரமத்தி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த 20 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
ராணுவத்தில் சேர பயிற்சி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஒரு பள்ளியில் தனியார் அகாடமி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சேலம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்கள் இந்திய ராணுவம் மற்றும் போலீசில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தினமும் உடற்பயிற்சியும், எழுத்து தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கபடி போட்டியை பார்ப்பதற்காக மணப்பள்ளிக்கு சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை பொத்தனூரை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 20) ஓட்டி சென்றார்.
20 வாலிபர்கள் படுகாயம்
குப்புச்சிபாளையத்தை அடுத்த பொய்யேரி திருமணிமுத்தாறு பாலம் அருகில் சரக்கு ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய ஆட்டோ, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணித்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கோகுல் (29), தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (22), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முனீஷ்குமார் (20), மம்சாபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (20) மற்றும் தினேஷ்ராஜ் (20), ஆதிதங்கம் (19), சரவணகுமார் (22), ராஜசேகர் (23), வினோத்குமார் (22), முத்துபாண்டி (20), பார்த்திபன் (19), மணிகண்டன் (23), கவிபாரதி (19) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
டிரைவரிடம் விசாரணை
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் ஆதிகேசவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பரமத்தி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த 20 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story