நாமக்கல்லில் நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
நாமக்கல்லில் நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ முகாம்
நாமக்கல் வட்டாரத்தில் பிறந்தது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமின் நோக்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தல், தேசிய அடையாள அட்டை பெற்று தருதல், தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் வழங்குதல், கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று தருதல், பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி மற்றும் சிறப்பு கல்வி அளித்தல் ஆகியவை ஆகும்.
அறுவை சிகிச்சை
இதேபோல் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைக்கு உள்ள குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து கொண்டு, அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றவும், கல்வி கற்கவும் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story