சிவாடி ஓமலூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் அதிகாரிகள் நேரில் ஆய்வு
சிவாடி - ஓமலூர் இடையே நடந்த மின்சார ரெயில் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி:
சிவாடி - ஓமலூர் இடையே நடந்த மின்சார ரெயில் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மின் பாதை
தர்மபுரி மற்றும் சிவாடி ரெயில் நிலையம் வழியாக தென் மேற்கு ரெயில்வே மூலம் தினசரி பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அகல ரெயில் பாதையில் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. முதற்கட்டமாக பெங்களூருவில் இருந்து ஓசூர், ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவாடி வரை மின் ரெயில் பாதையாக மாற்றப்பட்டு மின்சார ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த நிலையில் சிவாடி முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை மின்சார ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. தென்மேற்கு ரெயில்வே பெங்களூரு கோட்ட ரெயில் பாதுகாப்பு (சி.ஆர்.எஸ்.) கமிஷனர் ஏ.கே.ராய் தலைமையில் முதன்மை எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஜெய்பால் சிங், பெங்களூரு ரெயில்வே கோட்ட பொது மேலாளர் சியாம் சிங் மற்றும் அதிகாரிகள் மின்சார ரெயில் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ரெயில் பாதை சீரமைப்பு பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
100 கிலோ மீட்டர் வேகம்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சிவாடியில் இருந்து ஓமலூர் வரை 80 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தர்மபுரி, சிவாடி வழியாக உள்ள மின்சார ரெயில் பாதையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செல்லும் வகையில் மின்சார ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு தர்மபுரி வழியாக மின்சார ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story