உளுந்தூர்பேட்டையில் சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்


உளுந்தூர்பேட்டையில் சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 21 March 2022 10:52 PM IST (Updated: 21 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

உளுந்தூர்பேட்டை

சாலை விரிவாக்கப்பணி

உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளதோடு கனரக வாகனங்கள் செல்லும் போது பறக்கும் புழுதியானது இருசக்கர வாகன ஓட்டிகள், பாத சாரிகளின் கண்களில் படிந்து விடுவதால், கண் மற்றும் சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது.

சாலை மறியல்

எனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை விரிவாக்கப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும். புறவழிச்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிகர்கள் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
அப்போது சாலை விரிவாக்கப்பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story