விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பனையேறும் தொழிலாளர்கள் முற்றுகை
பதநீர் இறக்குபவர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்யும் போலீசாரை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பனையேறும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பனையேறும் தொழிலாளர்களான இவர்கள், தலைமுறை தலைமுறையாக பதநீர் இறக்குதல், கருப்பட்டி செய்தல், பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பனையேறும் தொழிலாளர்கள் மீது மதுவிலக்கு சட்டத்திற்கு புறம்பாக சாராய வழக்குகளை போடுவதாகவும், சமீபத்தில் பதநீர் இறக்கிய பாஸ்கர் என்ற பனையேறும் தொழிலாளர் மீது சாராய வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இவர் மீது போடப்பட்ட சாராய வழக்கை திரும்ப பெறக்கோரி பனையேறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேற்று விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், போலீசாரால் உடைக்கப்பட்ட பானைகளை சாலையில் கொட்டினர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 5 தொழிலாளர்களை மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்றனர். அங்கு கலெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விசாரணை நடத்த உத்தரவு
அப்போது அவர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பதநீர் இறக்குகிறார்களா?, கள் இறக்குகிறார்களா? என்று கூட உறுதிபடுத்தாமல் போலீசார் பனை மரத்தில் கட்டிய பானைகளை அடித்து உடைப்பதாகவும், பதநீர் இறக்குபவர்கள் மீது சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு பதிவு செய்வதை தடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு கலெக்டர் மோகன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பனையேறும் தொழிலாளர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story