கவுன்சிலர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
கவுன்சிலர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
திருப்பூர், மார்ச்.22-
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கொண்டு வந்த 2 நன்றி அறிவிப்பு தீர்மானத்தின் மீது கவுன்சிலர்கள் பேச அனுமதிக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தனது வார்டு அடிப்படை பிரச்சினைகள் சேர்த்து பேசினார். பள்ளிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க அனுமதிகோரி தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 4-வது குடிநீர் திட்டம் தாமதமாக நடக்கிறது. ஜம்மனை ஓடை, பட்டுக்கோட்டையார் நகர், ஜீவாநகர் பகுதியில் ஓடை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டும், அதற்குரிய கட்டணத்தை செலுத்த முடியாமல் இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கவுன்சிலர் செந்தில்குமார் குறுக்கிட்டு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மட்டுமே பேச அனுமதித்த நிலையில் வார்டு பிரச்சினைகளை கூறுவது முறையல்ல. மற்ற கவுன்சிலர்களும் பேச வேண்டும் என்றார். அதற்கு அன்பகம் திருப்பதி, நான் மட்டும் பேசவில்லை. மற்ற கவுன்சிலர்களும் வார்டு பிரச்சினையை பேசியுள்ளனர் என்றார். இதைத்தொடர்ந்து கவுன்சலர் ரவிச்சந்திரன் எழுந்து, வார்டு பிரச்சினைகளை பேச வேண்டாம் என்றார். அன்பகம் திருப்பதிக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசினார்கள். இதனால் மாமன்றத்தில் வாக்குவாதம் நீடித்தது. உடனே மேயர் தினேஷ்குமார், அவர்களை அமைதிப்படுத்தி, வார்டு பிரச்சினைகளை பேச தனியாக நேரம் ஒதுக்கப்படும் என்றார். பின்னர் அனைவரும் அமர்ந்தனர். இதனால் மாமன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story