கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்


கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 21 March 2022 11:19 PM IST (Updated: 21 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம் ஆனது

கன்னியாகுமரி, 
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.
அதன்படி நேற்று காலையிலும் பூம்புகார் படகுத்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது, விவேகானந்தர் மண்டபம் உள்ள கடல் பகுதியில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால், அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர், 10.30 மணிக்கு கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

Next Story