மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வெல்டர்


மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வெல்டர்
x
தினத்தந்தி 21 March 2022 11:26 PM IST (Updated: 21 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வெல்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை
தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வெல்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 45). வெல்டரான இவர், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். 
குணசேகரன் நேற்று தனது குடும்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனம்
எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8 லட்சம் கடன் வாங்கினேன் கடன் தவணையை முறையாக செலுத்தி வந்தேன்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து சொந்த ஊருக்கு வந்ததால் கடன் தவணையை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவனத்தினர் எனது வீட்டை பூட்டி ஜப்தி செய்து விட்டனர். இதனால் குடியிருக்க வீடு இன்றி குழந்தைகளுடன் சாலையோரத்தில் வசித்து வருகிறேன். 
பரபரப்பு
ஜப்தி செய்த எனது வீட்டை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றேன். இன்னும் 6 மாதத்தில் தனியார் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்த தயாராக உள்ளேன் என்றார். 
கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story