மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 21 March 2022 11:38 PM IST (Updated: 21 March 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மன்னார்குடி;
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
கொடியேற்றம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற  ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில்  பங்குனி மாதம் நடக்கும் திருவிழா முக்கிய திருவிழாவாகும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை  வேத மந்திரங்கள் முழங்க தீட்சிதர்கள் ஏற்றி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு கொடிசப்பரத்தில் ராஜகோபாலன் வீதிஉலா வந்தார். 
அலங்காரங்கள்
இன்று(செவ்வாய்க்கிழமை) புன்னைவாகனத்தில் ராஜகோபாலசாமி புறப்பாடு நடக்கிறது. நாளை(புதன்கிழமை) வெள்ளி ஹம்சவாகனத்தில் ராஜசேவையிலும், 4-ம் நாள் தஙககோவர்த்தனகிரி வெள்ளிதிருக்கோலத்திலும், 5-ம் நாள் பஞ்சமுக அனுமார் வாகனத்திலும்,  6-ம் நாள் கண்டபேரண்டபட்சி வாகனத்தில் ராஜஅலங்காரத்திலும், 7-ம் நாள் வண்ண புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்கார சேவையிலும் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  
8-ம் நாள் ரிஷியமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலத்திலும், 9-ம் நாளன்று சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், 10-ம் நாளன்று தங்கசூரியபிரபை வேணுகோபாலன் அலங்காரத்திலும் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார். 
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி உற்சவம் ஏப்ரல் 5-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 6-ந் தேதி(புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. 19-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ணதீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story