பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 March 2022 12:05 AM IST (Updated: 22 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி, வெள்ளியணை, நச்சலூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

அரவக்குறிச்சி, 
கூட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் நர்கீஸ் பானு முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். தலைமையாசிரியர் சாகுல் அமீது மேலாண்மை குழுவின் சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். 
கூட்டத்தில், மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றல் இன்றி பாதுகாத்தல், பள்ளிக்கட்டிட மேம்பாடு, பள்ளிக்கான பட்ஜெட் திட்டங்கள், ஆசிரியர் பணியிடங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி பற்றியும் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவில் ஒவ்வொருவரும் எவ்வாறு விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும், புரொஜெக்டர் மூலமாகவும், காணொலிகள் மூலமாகவும், விளக்கி கூறப்பட்டது. இதேபோன்று அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. 
வெள்ளியணை
 வெள்ளியணை பகுதியிலுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மேலாண்மை குழு என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அவசியம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், இக்குழுவிற்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் தலைமை ஆசிரியர் தீனதயாளன் மற்றும் ஆசிரியர்கள் விளக்கி கூறினார்கள். கூட்டத்தில், ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நச்சலூர்
குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் பழனிவேலு தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கெளதமி மேலாண்மைக்குழு விழுப்புணர்வு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும்
பள்ளியில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும், தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவ-மாணவிகளை கண்டறிந்து அரசு பள்ளியில் சேர்ப்பது, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவும் பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்பட பல அறிவுரைகள் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதேபோல்  திருச்சாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Next Story