சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்


சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 22 March 2022 1:32 AM IST (Updated: 22 March 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

விருதுநகர், 
தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. 
கட்டணம் நிர்ணயம் 
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
சேவை உரிமைச் சட்டத்தின்படி அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத்தொகையை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கவும், குறித்த காலத்திற்குள் சேவையை வழங்காத அலுவலர்கள் தண்டிக்கப்படவும் கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசின் சேவைகள் விண்ணப்பிக்கப்பட்ட நாட்களிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
உரிமைச்சட்டம் 
இதனால் அரசின் சேவைகள் எப்போது கிடைக்கும் என்று மாதக்கணக்காக மக்கள் காத்திருப்பது தவிர்க்கப்படும். வடமாநிலங்களில் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களிலும் சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 மத்தியபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி குறிப்பிட்ட கால வரம்புக்குள் அரசின் சேவைகள் மக்களை சென்றடைகிறதா என கண்காணிக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை சேவை பெறும் உரிமைச்சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
தேர்தல் அறிக்கை 
 தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டிருந்தது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பொதுச் சேவை மற்றும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது செயல்படுத்தப்படாமல் உள்ளது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. எனவே அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்திலும் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து சட்டம் இயற்றவேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்டதொடரில் அதற்கு ஏற்பாடு செய்தால் மிகவும் பாராட்டுக்குரிய செயலாக அமையும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story