உக்ரைனில் இருந்து திரும்பிய 700 மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க அரசு முடிவு-மந்திரி சுதாகர்
நிரந்தர முடிவு எடுக்கப்படும் வரை உக்ரைனில் இருந்து திரும்பிய 700 மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்
பெங்களூரு: நிரந்தர முடிவு எடுக்கப்படும் வரை உக்ரைனில் இருந்து திரும்பிய 700 மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
நிரந்தர முடிவு
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உக்ரைனில் இருந்து சுமார் 700 மருத்துவ மாணவர்கள் கர்நாடகம் திரும்பியுள்ளனர். அவர்கள் கர்நாடகத்தில் உள்ள 60 மருத்துவ கல்லூரிகளில் பயில முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒரு நிரந்தர முடிவு எடுக்கும் வரை அவர்கள் தற்காலிகமாக படிப்பை தொடர்வார்கள். அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்
அந்த குழு, அந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை அரசுக்கு வழங்கும். மேலும் அந்த மாணவர்களின் நலனை காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். உக்ரைனில் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். அதன் பிறகு அங்கு எந்த மாதிரியான நிலை வரும் என்பதை பார்க்க வேண்டும்.
அந்த மாணவர்களின் மனநிலை மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் நலனுக்காக எந்த அளவுக்கு நல்ல முடிவு எடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். அவர்களை அழைத்து வருவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை. அந்த அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு கர்நாடக அரசு தனது ஆலோசனையை தெரிவிக்கும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story