பனமரத்துப்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் தலைமையில் ஆய்வு
பனமரத்துப்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
பனமரத்துப்பட்டி ஏரி
சேலத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனமரத்துப்பட்டியில் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 12ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது ஏரியில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளித்து வருகிறது.
ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரியும், மேட்டூர் உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆய்வு
இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். .அப்போது அவர்கள் ஏரியின் நீர் தேக்க பகுதிகளை பார்வையிட்டனர்.
பின்னர் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், ஏரிக்கு தண்ணீர் வராததற்கான காரணம் குறித்தும், நீர்வரத்து பகுதிகளில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை அகற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் உபரி நீர்
நீர் நிலைகள் அனைத்தையும் மேம்படுத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி நீரை சேமித்து சுகாதார முறையில் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பணியை தொடங்கியுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். பனமரத்துப்பட்டி ஏரியை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் செம்மலை, சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story