சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி-ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கட்சி நிர்வாகி மீது புகார்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
சேலம் அருகே உடையாப்பட்டி பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). இவர் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் தனது மனைவி சாந்தி, மகன்கள் கதிரவன் (12), சரண் (10) மற்றும் தாய் ஆனந்தி (53) ஆகியோருடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேரும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருகில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றி தடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணீர் மல்க தி.மு.க. பிரமுகர் நாகராஜன் கூறியதாவது:-
ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டல்
சேலம் அம்மாபேட்டையில் நான் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகி ஒருவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மேட்டூர், ஏற்காடு தொகுதிகளில் போட்டியிட கட்சி தலைமையிடம் சிலருக்கு சீட் வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். அந்த பணத்தில் ரூ.67 லட்சம் என்னிடம் கொடுத்துள்ளதாகவும், அதை திரும்ப தரக்கோரியும் சம்பந்தப்பட்ட தி.மு.க. நிர்வாகி எனது குடும்பத்தினரை அடித்து துன்புறுத்தி வருகிறார்.
மேலும், குழந்தைகளை காரில் கடத்தி சென்று ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு எனது தந்தையிடமும் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனது பேக்கரி கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
கொலை மிரட்டல்
பணத்தை கேட்டு எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வேறு வழியின்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன். எனவே, பணம் கொடுத்ததாக கூறி மிரட்டல் விடுக்கும் தி.மு.க. நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் யாரிடமும் பணத்தை வாங்கவில்லை.
இவ்வாறு நாகராஜன் கூறினார்.
தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுவது உண்மையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story