தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்கப்பட்ட 100 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்கப்பட்ட 100 செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்கப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஒப்படைத்தார்.
செல்போன் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். இதனால் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் மீட்டனர். ஏற்கனவே 353 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 453 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ஒப்படைப்பு
தற்போது செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கி பேசினார். அப்போது. செல்போனை பயன்படுத்தும்போது பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் கவனமாக கையாளவேண்டும், செல்போனில் நல்ல நிகழ்வுகளும் வருகிறது, கெட்ட நிகழ்வுகளும் வருகிறது, சிறுவர், சிறுமிகள் ஆன் லைன் வகுப்புக்கு செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்கள் என்னென்ன விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும், செல்போன் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், மற்ற நேரங்களில் அதை பொதுவான இடத்தில் வைக்கும்படி செய்யவேண்டும், அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையில்லாதவற்றையோ, வேறு பிரச்சனைகள் வரக்கூடியதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
நடவடிக்கை
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு வகையான 10 திருட்டு வழக்குகளில் நூதனமான முறையில் திருடிய 12 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து உள்ளோம். அவர்களிடம் இருந்து ரூ.91 ஆயிரம் மதிப்புள்ள 3 ½ பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்வலை மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரத்து 560-ம் மீட்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story