புதுச்சேரி சட்டசபையில் 30-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபையில் வருகிற 30-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் செல்வம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் வருகிற 30-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் செல்வம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை கூடுகிறது
15-வது சட்டசபையின் 2-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ந்தேதி கூட்டப்பட்டு அதன் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேறியதை தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 2-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதியாக வருகிற 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது.
அந்த கூட்டத்தொடரின்போது 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக்கால பட்ஜெட்) குறித்த மசோதாவினை சட்டசபையில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். மேலும் 2021-22-ம் நிதியாண்டிற்காக கூடுதல் செலவினம் குறித்த மசோதா ஒன்றையும் தாக்கல் செய்வார். சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
கலெக்டர் மீது நடவடிக்கை
2-வது கூட்டத்தொடரின் தொடர்ச்சி என்பதால் இந்த கூட்டத்தில் கவர்னர் உரை இடம்பெறாது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கவர்னர் உரை இடம்பெறும். அரசு அதிகாரிகள் சிலர் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற இடையூறாக உள்ளார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சபாநாயகரான எனக்கு அதிகாரம் உள்ளது.
காரைக்கால் கலெக்டர் உள்பட அதிகாரிகள் சிலர் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் மீது இந்த கூட்டத்தொடருக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய சட்டசபை கட்டிடம்
புதிய சட்டசபையை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எந்த மாடலை அடிப்படையாக கொண்டு கட்டுவது என்பது தொடர்பாக பல்வேறு மாநில சட்டசபைகளை பார்த்து வருமாறு முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி கோவா, தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டமன்றங்களை புதுவை எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட உள்ளனர்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story