மேலஅரசரடி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
மேலஅரசரடி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
ஓட்டப்பிடாரம்:
மேலஅரசரடி பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
ஓட்டப்பிடாரம் தாலுகா மேல அரசரடி பஞ்சாயத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மீது வீட்டு தீர்வை ரசீது கட்டவில்லை எனக் கூறி பஞ்சாயத்து தலைவர் ரோகிணிராஜ் பதவி நீக்கம் செய்துள்ளார். வார்டு உறுப்பினர்கள் பதவி நீக்கத்தை கண்டித்தும், மேல அரசரடியில் குடிநீர் கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஓட்டப்பிடாரம் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அங்கு வந்த பஞ்சாயத்து தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத் மற்றும் புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஞ்சாயத்து தலைவர் உறுதி
இதில், வருகிற 1-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், மேல அரசரடியில் குடிநீர் கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என பஞ்சாயத்து தலைவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story