டைல்ஸ் கடையில் பணம் திருட்டு


டைல்ஸ் கடையில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 March 2022 8:37 PM IST (Updated: 22 March 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மேற்கூரையை பிரித்து டைல்ஸ் கடையில் ரூ.2 லட்சம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே ராமையன்பட்டி பழனி சாலையில், டைல்ஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜ் (வயது 29). கடந்த 19-ந்தேதி இவர், வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால், அவர்  கடையை திறக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறந்து நாகராஜ் உள்ளே சென்றார். 

அப்போது அலுவலக அறையில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சிஅடைந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன கடையின் மேற்கூரையை பிரித்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் பணத்தை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story