தாய், உறவினர்களுடன் போலீசார் விசாரணை
5 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தாய், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே உள்ள ராசாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 30). டெய்லர். அவருடைய மனைவி லதா (25). இந்த தம்பதிக்கு கவின் (3), கோகுல் (5 மாதம்) ஆகிய 2 குழந்தைகள் இருந்தன.
நேற்று முன்தினம் மாலையில் குழந்தை கோகுலை வீட்டில் பாயில் படுக்க வைத்து விட்டு லதா கழிப்பறைக்கு சென்றதாக தெரிகிறது. சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு குழந்தை இல்லை.
வீட்டருகே சண்முகநதி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள புதருக்குள் குழந்தை கோகுல் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர கொலை குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தை கோகுலின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தாய் லதா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லதா பிரசவத்துக்காக பாச்சலூர் அருகே சம்பரான்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் அவர், குழந்தை கோகுலுடன் ராசாபுரத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story